டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

டெங்கு கொசு

பணமும், வசதிகளும் மட்டுமே மகிழ்ச்சியின் அளவுகோல் அல்ல. வியாதி இல்லாத உடம்பும், வேதனை இல்லாத மனதும் தான் நிறைவான வாழ்க்கை. நோயுறும்போது தான் வாழ்க்கையின் அருமை தெரியும்.

மக்கள் தொகை பெருக்கமும், உணவுமுறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், சுகாதார சீர்கேடு போன்றவற்றால் நாட்டு வியாதிகளுக்கு பஞ்சமில்லை.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. சென்னை உள்ளிட்ட சில ஊர்களில் இந்த காய்ச்சலால் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதை கட்டுப்படுத்துவது எப்படி? என்பன போன்ற விவரங்கள் பற்றி நாம் பார்ப்போம்.

உலக அளவில் சுமார் 200 கோடி மக்கள், மனித கழிவு கலந்த நீரை பருகுவதால் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு, போலியோ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றுபோக்கால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் 70 சதவீத மேற்பரப்பு நீரும், மிகுந்த அளவிலான நிலத்தடி நீரும், சாக்கடை, தொழிற்சாலை, நச்சுப் பொருட்கள், மேலும் மனித கழிவால் மாசு அடைகின்றன. இந்தியாவிலுள்ள எந்த ஒரு நீர்நிலை நீரும் பருகத் தகுந்த நிலையில் இல்லை என்பதே உண்மை.

சாக்கடை, மனிதக் கழிவு மேலும் பிற கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இதனால், சாக்கடை கொசுக்கள் வாழும் இடமாக மாறுகிறது. மேலும் திடக்கழிவுகளால் மாசடைந்த நீரை பருகுவதால் நீர் சார்ந்த வியாதிகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இவ்வகை வியாதிகளால் பாதிப்படைந்த மக்களின் உடல்நலம் கெடுகிறது. எனவே, நலிந்த உடம்புடன் தாங்கள் வாழ்விற்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் போய்விடுகிறது. ஆகவே, வியாதிகளால் பாதிக்கப்படும் மக்கள் வாழும் நாட்டின் பொருளாதாரமும் சீரழிகிறது.

இந்தியாவில், 2010-2017-ல் 1,348 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்து இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டில் மட்டும் 245 பேர் இறந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி முடிய தமிழகத்தில் 80-க்கும் மேலான மக்கள் டெங்கு காய்ச்சலால் இறந்து இருக்கிறார்கள்.

டெங்கு காய்ச்சல் இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை. ஐ.நா.சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, கடந்த 50 ஆண்டுகளில், டெங்கு வியாதி உலக அளவில் 30 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் 100-க்கும் மேலான நாடுகளில் 5 கோடி முதல் 10 கோடி மக்கள் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வறட்சி, ரத்த கசிவு, குறைந்த ரத்த அழுத்தம், குறைந்த இதயத் துடிப்பு, ஈரல் பாதிப்பு, நரம்புகள் பாதிப்பு ஏற்படும். மேலும் இறக்கவும் கூடும் என்பதால், இவர்களுக்கு இவ்வியாதி அறிகுறி தெரிந்ததும் முறையான மருத்துவம் செய்வது அவசியம்.

கொசுக்கள் கடிக்கும் வலியை உணர்கிறோம். ஆனால் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாது, மலேரியா, சிக்கன்குனியா, ஜிகா போன்ற பிற வியாதிகளும் ஏற்படும் .எனவே, ஐ.நா.சுகாதார நிறுவனம் மக்களின் உடல் நலக் கேட்டை விளைவிப்பதில் முதலிடம் வகிப்பது கொசுக்கள் மட்டுமே என்று கூறி இருப்பதை கவனத்தில் கொண்டு கொசுக்கள் ஒழிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வீடுகள் மற்றும் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகள்,வாளிகள்,செடி தொட்டிகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்கள் தண்ணீர் சார்ந்த வியாதிகள்:

தரமற்ற நீர், மாசடைந்த சுகாதாரம், சாக்கடை, பொது இடத்தில் கழிப்பது மேலும் பிற கழிவுப் பொருட்கள் ஆகியவை சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றன. இதனால் வியாதிகள் பரவுகின்றன. மாசடைந்த சுற்றுச்சூழலில் வியாதிகளில் இருந்து தப்பிப்பது சிரமம்.

உலக அளவில், இந்தியாவில், தமிழகத்தில் உற்பத்தியாகும் கழிவு நீர் முறையே 2,212 கன கிலோமீட்டர், 44.63 கன கிலோ மீட்டர், 2.15 கன கிலோ மீட்டர் ஆகும்.( ஒரு கன கிலோ மீட்டர் என்பது 100 கோடி கன மீட்டர் அல்லது ஒரு லட்சம் கோடி லிட்டர்)

கொசுக்கள் கழிவுநீரில் வளமாக வாழ்வதற்கு காரணம், அவை புழுவாக இருக்கும்பொழுது காற்றை சுவாசிப்பதற்கு ஏற்றவாறு சிறப்பான உறிஞ்சுகுழல் பெற்றிருக்கிறது என்றும், பிறவகை புழுக்களுக்கு இவ்வகை அமைப்பு இல்லை என்றும், மேலும் கழிவு நீரில் உள்ள நச்சுப் பொருட்கள் இவற்றை பாதிப்பது இல்லை என்றும் லூயிஸ் பெர்னாண்டோ சாவெஸ்( எமோரி பல்கலைகழகம், அட்லாண்டா மாநிலம், அமெரிக்க நாடு) என்ற ஆய்வாளர் கண்டறிந்து உள்ளார்.

எனவேதான் கொசுக்களின் பிறப்பிடம் கழிவு நீராக இருக்கிறது. தற்போது உலகின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் கொசுக்கள் வாழ்நாள் கூடிவருகிறது. எனவே, தொடர்ந்து அவை மனிதர்களை கடித்து வியாதியை பரப்புகின்றன.

தரமற்ற குடிநீர், மாசடைந்த சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்புகள்:

தரமான குடிநீர் மக்களின் அடிப்படைத் தேவை. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி 2013-ம் ஆண்டில், உலக அளவில் 78 கோடி மக்கள் தரமான குடிநீர் கிடைக்காமலும், மேலும் 250 கோடி மக்கள் தரமான சுகாதாரம் இல்லாமலும் வாழ்ந்தார்கள்.

இந்தியாவில் சராசரியாக சுமார் 7.38 கோடி மக்கள் தரமான குடிநீர் கிடைக்காமல் வாழ்கிறார்கள். ஆனால் வறட்சி ஆண்டுகளில் இங்கு சுமார் 40 கோடி மக்கள் தரமான குடிநீர் கிடைக்காமல் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் மற்றும் 2016-2017-ம் ஆண்டில் சுமார் 7 கோடி மக்கள் தரமான குடிதண்ணீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் அடைந்துள்ளனர்.

நீர் சார்ந்த வியாதிகளால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 9 கோடி வேலை நாட்களை இழக்கிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பும், வியாதிகளை குணப்படுத்த ஆகும் செலவும் 600 கோடி ரூபாய் ஆகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, உலக அளவில் 250 கோடி மக்கள் பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவில் 59.7 கோடி மக்கள் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பொது இடங்களைக் கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கழிப்பறையை விட கைபேசிகள் அதிகமாக உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் கூட 5 சதவீதத்திற்கும் குறைவான மக்களே பொது இடங்களை கழிவறைகளாக பயன்படுத்துகிறார்கள்.

இந்திய மக்கள் பொது இடங்களைக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு 5,400 கோடி அமெரிக்க டாலர் என்றும், தனி மனிதனுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு 48 அமெரிக்க டாலர் அல்லது 2,072 ரூபாய் என்றும் உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த தூய்மைக் கேட்டால் இந்தியாவில் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளால் ஆண்டு ஒன்றுக்கு 3,500 கோடி அமெரிக்க டாலர் செலவு ஆகிறது என்றும் உலக வங்கி கணக்கிற்கு இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு கிராம் மனிதக்கழிவில் ஒரு கோடி நுண்ணுயிர் கிருமி, 10 லட்சம் நோய்க்கிருமி, 1000 ஒட்டுயிரி, மேலும் 100 ஒட்டுயிரி முட்டைகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு சுமார் 81 சதவீதம் மழை குறைவு. இதன் காரணமாக பொது இடங்களில் உள்ள மனித கழிவையும், தேங்கியுள்ள சாக்கடையும் மழை நீரால் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஓடும் அளவில் மழை நீர் இல்லாததால் மண்ணிலுள்ள அசுத்த நீரையும் அகற்ற முடியவில்லை.

எனவே, மனித கழிவு கலந்த சாக்கடை நீர் கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவானதாக இருக்கிறது. இக்கொசுக்கடியால் மக்களுக்கு காய்ச்சல் பரவுகிறது. குடிப்பதற்கு தரமான நீர் கிடைக்காததால், பெரும்பாலும் அசுத்த நீரையே பருகியாதல் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது. இதன் காரணமாகவே டெங்கு காய்ச்சல் மற்றும் மேலும் பிற நோய்களால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணப்படுத்துவது எப்படி?

முழுக்கால், முழுக்கை சட்டை, முழு காலணி அணிதல், உறங்கும் கட்டிலுக்கு கொசு வலை, வீட்டின் ஜன்னல்கள் வெளி கதவுகளுக்கு கொசு வலை ஆகிய வழிகளில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் இவ்வழிகளில் கொசுக்கள் கடிப்பதை தவிர்க்க முடியவில்லை. இதனால், டெங்கு நோய் பரவுவதை தடுக்க முடியவில்லை.

முதல் முறையாக உலக சுகாதார நிறுவனம் 2016-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காப்பாற்ற டெங்வாக்சிகா என்ற தடுப்பூசி மருந்திருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த ஊசிமருந்து பிரான்சு நாட்டில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சியில் தயாரிக்கப்பட்டது. தற்போது மெக்சிகோ, பிரேசில், எல்சல்வோடார்,பிலிப்பைன்ஸ் ஆகிய 4 நாடுகள் இந்த ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதித்து உள்ளன.

இந்த ஊசிமருந்து 59.2 அளவில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காப்பாற்றி இருப்பதாக தெரிகிறது. ஆனால் முறையாக இந்த ஊசி மருந்தை பயன்படுத்தாவிடில் டெங்கு காய்ச்சல் பலரை பாதிக்கும் என்று நெயில் எம்.பெர்குசான் குழுவினர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

டெங்கு காய்ச்சலில் இருந்து முழுவதுமாக விடுபட முடியாதற்கு 4 வகை டெங்கு நுண்ணூயிர் கிருமிகளால் கொசுக்கள் இவ்வியாதியை பரப்புவது காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த பப்பாளி இலைச்சாறு கொடுக்கப்படுகிறது. இச்சாறு நோயாளிக்கு ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தம். மேலும், தமிழ்நாட்டில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது.

பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு குடிநீர் ஆகியவையும், டெங்வாக்சிகா ஊசி மருந்தும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உதவினாலும், வருமுன் காப்பது என்ற தத்துவப்படி இந்த நோய் மட்டுமல்லாது கொசுக்கடியால் பரவும் பிற 17 வியாதிகள் மேலும் நீர் சார்ந்த வியாதிகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வழிகள் உள்ளன.

சுத்தமான குடிநீர், கழிவு நீரை உரிய முறையில் நல்ல நீராக்கிப் பயன்படுத்துதல், பொது இடங்களில் மக்கள் மலம் கழிப்பதை முற்றிலும் தவிர்த்தல், கொசுக்கள் ஒழிப்பு போன்றவற்றின் மூலம் 17 வகையான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

எனவே, 2022-ம் ஆண்டில் இந்திய மக்கள் அனைவரும் நல்ல குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சுகாதார, வீடு, பள்ளி போன்ற வசதிகளை பெரும் சமயத்தில், கொசுக்கள் மற்றும் நீர் சார்ந்த வியாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று நம்புவோம். அதற்கு ஏற்ற வகையில் ”கொசுக்கள் உற்பத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழியை எடுப்போம். கொசுக்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்! எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்.

Comments

Popular posts from this blog

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?